ஆஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாதத் தாக்குதல்: காயமடைந்த மூதாட்டி ஓராண்டுக்கு பிறகு உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் சிட்னி, போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் படுகாயமடைந்த 90 வயது மூதாட்டி, சுமார் 12 மாதங்களுக்குப் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.தீவுகள் ஆராயுங்கள்
கடந்த 2025ஆம் ஆண்டு டிசம்பர் 14ஆம் திகதி, போண்டி கடற்கரையின் ஆர்ச்சர் பூங்காவில் நடைபெற்ற ஹனுக்கா (Hanukkah) யூத மதப் பண்டிகைக் கொண்டாட்டத்தின்போது இரு துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த மூதாட்டி படுகாயமடைந்தார்.
பலத்த காயங்களுக்கு உள்ளான அவர், இந்த ஆண்டு முழுவதும் பலமுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 10 வயது சிறுமி மடில்டா உள்ளிட்ட மேலும் 15 பேர் கொல்லப்பட்டனர். சம்பவம் ஆரம்பமாகி ஏழு நிமிடங்களுக்குள் இரு துப்பாக்கிதாரிகளும் சுடப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நவீத் அக்ரம், பயங்கரவாதம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரது தந்தையான சஜித் அக்ரம் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, யூத எதிர்ப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அரச ஆணைக்குழு, 62 நாட்கள் நடைபெற்ற விசாரணைகளில் 340க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி விர்ஜினியா பெல் தலைமையிலான இந்த ஆணைக்குழு, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கும், கொள்கை மற்றும் மத அடிப்படையிலான தீவிரவாதப் போக்குகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குமான பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளது.
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை எதிர்வரும் டிசம்பர் 18ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து நான்கு நாட்கள் பிற்போடப்பட்டுள்ள இந்த முடிவு, தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 90 வயது மூதாட்டிக்கான இறுதிச் சடங்கு மற்றும் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.




