மேற்காசிய போரால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு நிதி நெருக்கடி
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் நெருக்கடியும், அதனைத் தொடர்ந்து அதிகரித்துள்ள எரிபொருள் விலையும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
இந்த மோதலால் மாத்திரம் ஏற்பட்டுள்ள நிதி இழப்புகள் தொடர்பான அறிக்கையை அதிகாரிகள் தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026/2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் வரிக்கு முந்தைய நிலையில் 35.6 பில்லியன் ரூபா நட்டத்தைப் பதிவு செய்துள்ளது. நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அரையாண்டு நிதி அறிக்கையில் இந்தத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தணிக்கை செய்யப்படாத முகாமைத்துவக் கணக்குகளின்படி, குறித்த காலப்பகுதியில் மொத்த வருமானம் 82.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இது 2025/2026 நிதியாண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 62.6 பில்லியன் ரூபாவை விட அதிகமாகும்.
மத்திய கிழக்கில் மோதல் தீவிரமடைந்ததால் விமானப் போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மத்திய கிழக்கின் பல்வேறு நகரங்களுக்கான விமானச் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியதுடன், வான்வெளிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் சேவைகளை ஆரம்பித்தது.
மத்திய கிழக்கு நாடுகள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானப் போக்குவரத்து வலையமைப்பில் முக்கிய இடம் வகிப்பதால், இந்தத் தடங்கல் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து வருமானத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியது.
அதேவேளை, பிராந்திய விமானப் போக்குவரத்துகள் தற்காலிகமாகத் திசைதிருப்பப்பட்டு இலங்கை ஊடாகச் சென்றதால், விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளும் பயணிகளின் வருகையும் ஓரளவு அதிகரித்தன. இதனால் விமானப் போக்குவரத்துத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு ஓரளவு ஈடுசெய்யப்பட்டது.
வருமானம் அதிகரித்த போதிலும், செயற்பாட்டு நட்டம், அதிகரித்த எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள், அந்நியச் செலாவணி இழப்புகள் மற்றும் நிதிச் செலவுகள் காரணமாக நிறுவனம் தொடர்ந்தும் நட்டத்தைச் சந்தித்து வருகின்றது.
இதனால், நிறுவனத்தின் அன்றாடச் செயற்பாடுகள் மற்றும் நிதிக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியைத் தனது சொந்த வருமானத்தின் ஊடாகத் திரட்டுவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும், ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிகர வருமானம் 3.4 பில்லியன் ரூபாவாக அதிகரித்ததன் காரணமாக, குழுமத்தின் மொத்த நட்டம் 32.2 பில்லியன் ரூபாவாகக் குறைந்துள்ளது.
2026 ஜூன் மாத இறுதியில் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி 209.9 பில்லியன் ரூபாவாக இருந்ததுடன், மொத்தப் பொறுப்புகள் 561.4 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளன. இதனால் நிறுவனத்தின் மூலதனம் கடுமையாகச் சரிவடைந்துள்ளது.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட சில கடன்களின் முதலாம் மற்றும் இரண்டாம் தவணைகளைச் செலுத்துவதற்காக அரசாங்கம் நிதி உதவிகளை வழங்கியுள்ளது.
அத்துடன், நிறுவனத்தின் குறுகியகால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 30 மில்லியன் அமெரிக்க டொலர்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும், 175 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அரசாங்க உத்தரவாதப் பத்திரங்கள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மறுசீரமைக்கப்பட்ட 126.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பத்திரங்கள் 2026 மார்ச் 20ஆம் திகதி முதல் அரசாங்கத்தின் கடன் தொகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில், நிறுவனத்தின் செயற்பாடுகளை விரிவாக மறுஆய்வு செய்வதற்கான மூலோபாய மற்றும் மறுசீரமைப்புக் குழுவை அமைக்க 2026 ஜூன் மாதம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி விபுல் மிஸ்ரா, மேற்கு ஆசிய நெருக்கடியால் விமான எரிபொருளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மசகு எண்ணெயின் விலை அதிகரிக்கும்போது, சுத்திகரிப்பு நிலையங்கள் அதிகளவில் பெற்றோல் மற்றும் டீசல் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இதனால் விமான எரிபொருள் உற்பத்தி மீதான கவனம் குறைகின்றது.
விமான எரிபொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும்போது, அதன் விலையும் மேலும் அதிகரிக்கின்றது. இது விமானப் போக்குவரத்துத் துறையைப் பாதிக்கின்றது. மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பினால் மாத்திரம் இந்தப் பாதிப்பு ஏற்படுவதில்லை” என்றார்.
மேலும், மத்திய கிழக்கு நெருக்கடியால் மாத்திரம் ஏற்பட்ட நிதி இழப்புகள் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அதனைச் சரிபார்த்து இறுதிப்படுத்தும் நடவடிக்கைக்காகத் தமது அலுவலகம் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.




