போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் திருப்பம்: அமெரிக்காவுக்கு ஈரான் புதிய நெருக்கடி
கட்டார் ஊடாக அமெரிக்காவுக்கு அணுசக்தி தொடர்பான முன்மொழிவொன்றை ஈரான் அனுப்பி வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், வாஷிங்டன் தனது ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றிய பின்னரே குறித்த முன்மொழிவு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என ஈரானின் மூத்த அதிகாரியொருவர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, ஈரானின் முன்மொழிவை அமெரிக்கா பரிசீலித்து வருவதாகவும், அதற்கு மேலதிக விபரங்களை வெளியிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மீண்டும் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுவதால், போரை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்த நாடுகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
போர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால், முன்னெப்போதையும் விட விரிவான பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயி, வியாழக்கிழமை ரஷ்யாவுக்கான விஜயத்தின்போது கருத்துத் தெரிவிக்கையில்,
“இராஜதந்திரப் பேச்சுவார்த்தை தொடர்பில் அமெரிக்காவுக்கு ஏழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளோம். அவற்றை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவோ, பேச்சுவார்த்தையில் ஈடுபடவோ மாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை நீக்குதல், முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துக்களை விடுவித்தல் மற்றும் போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
ஆனால், எந்தவொரு ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தையிலும் அணுசக்தி விவகாரம் கட்டாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல்களை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் லெபனானிலும் மோதல்கள் வெடித்தன.
அண்மையில் இந்த மோதல் யேமனுக்கும் பரவியுள்ளதுடன், ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவில் உள்ள எரிசக்தி நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பல இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.




