இலங்கையில் மாகாணசபைத் தேர்தல் எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு
“நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று எதிரணிகள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றினால், விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்க முடியும்”- என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய விஜித ஹேரத் எம்.பி., மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் மேலும் கூறியதாவது:
“மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் எனக் கூறும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள், தெரிவுக்குழுக் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. கருத்துகள் மற்றும் யோசனைகளை முன்வைக்குமாறு நாம் அழைப்பு விடுத்திருந்தோம். எனினும், அவர்கள் அதில் பங்கேற்கவில்லை.
மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு சட்டப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு உரிய வாய்ப்பு இருக்கும்போது தமது பொறுப்பை நிறைவேற்றத் தவறிவிட்டு, வெளியே சென்று தேர்தல் குறித்து பேசுவதால் எந்தப் பயனும் இல்லை” என்றார் விஜித ஹேரத்.




