அல்பேனியாவில் மீண்டும் வன்முறைப் போராட்டம்: நாடாளுமன்றிலும் மோதல்
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிரதமர் எடி ராமா Edi Rama பதவி விலகக் கோரி மாணவர்கள் தலைமையில் பல வாரங்களாக அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், வியாழக்கிழமை நாடாளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எரிகுண்டுகளை வீசி அமர்வுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
மத்திய வங்கி தொடர்பான சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றபோது, எதிர்க்கட்சியான அல்பேனிய ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகர் மேடைக்குச் செல்லும் வழியையும் தடுத்தனர்.
இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சாலி பெரிஷா, “ஆளுங்கட்சி உறுப்பினர்கள் குற்றவாளிகள். இளைஞர்கள் மீது அல்ல; அவர்களுக்குப் பதிலாக இவர்களுக்கே கண்ணீர்ப்புகை, ரப்பர் தோட்டாக்கள், மண்டை உடைதல் மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இதையடுத்து அவரது ஒலிவாங்கி முடக்கப்பட்டது.
அவர் உரையாற்றியபோது, ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, ரப்பர் தோட்டாக்களால் காயமடைந்த போராட்டக்காரர்களின் புகைப்படங்களை ஏந்தியிருந்தனர். சிலர் தமது கட்சியின் நிறமான நீல நிற எரிகுண்டுகளையும் உயர்த்திப் பிடித்தனர்.
அரசாங்கத்தில் நிலவும் ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள், வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வித் தரம் குறித்த அதிருப்தி ஆகியவற்றால் தூண்டப்பட்ட மாணவர் போராட்டங்கள், ஒக்டோபர் நடுப்பகுதியிலிருந்து தலைநகர் திரானாவில் தீவிரமடைந்து, ஏனைய நகரங்களுக்கும் பரவியுள்ளன.
பிரதமர் எடி ராமா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தும் போராட்டக்காரர்கள், அரசாங்கக் கட்டடங்கள் மற்றும் வங்கிகளுக்குத் தீ வைத்ததுடன், கடைகளின் கண்ணாடிகளையும் உடைத்து, நடைபாதைக் கற்களைப் பெயர்த்து பொலிஸார் மீது வீசியுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் ஆடம்பரக் கடலோர அபிவிருத்தித் திட்டத்துக்கு எதிராக, கோடைக்காலத்தில் பல மாதங்களாக அமைதியான முறையில் போராட்டங்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள தற்போதைய அமைதியின்மை, 2013ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் ராமாவுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாகக் கருதப்படுகிறது. அவர் கடந்த ஆண்டு நான்காவது முறையாகப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
வன்முறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமா புதிய நடவடிக்கைகளை அறிவித்தார். வன்முறையாக மாறும் போராட்டங்களில் பங்கேற்போருக்கு, அவர்கள் நேரடியாக வன்முறையில் ஈடுபடாவிட்டாலும், 500,000 லெக் (சுமார் 6,200 அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதிக்கப்படும் என்பதும் அவற்றில் அடங்கும்.
இந்த வாரம் போராட்டங்கள் பெரும்பாலும் அமைதியான முறையில் இடம்பெற்றுள்ளதுடன், அடுத்த போராட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், வீதிகளில் நிலவும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகப் பிரதமர் ராமா மீண்டும் தெரிவித்துள்ளார். எரிபொருள் விலையைக் குறைத்தல் மற்றும் வறிய குடும்பங்களுக்கான நிதியுதவியை அதிகரித்தல் உள்ளிட்ட பொருளாதார நடவடிக்கைகளையும் அவர் அறிவித்துள்ளார்.





