இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் டிசம்பரில் கைச்சாத்து
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடைமுறைக்கு வரக்கூடும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுத் தலைவர் டேவிட் மெக்கலிஸ்டர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பர் நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரஸ்ஸல்ஸுக்குப் பயணம் மேற்கொள்ளக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கான வாக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு வசந்த காலத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக மெக்கலிஸ்டர் தெரிவித்துள்ளார். இரு தரப்புக்கும் கிடைக்கக்கூடிய நன்மைகளைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்தத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடுகள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்தியாவில் ஐரோப்பிய முதலீடுகள் அதிகரிப்பதுடன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளதாக மெக்கலிஸ்டர் தெரிவித்துள்ளார்.
மேலும், விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல், குறிப்பிட்ட நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கும் இந்த ஒப்பந்தம் உதவும் என அவர் கூறியுள்ளார்.





