அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்!! நெதன்யாகுவிற்கு ஏற்பட்ட பெரும் தோல்வி
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவிற்கும் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற இஸ்ரேலிய அரசியல் ஆய்வாளர் கிடியான் லெவி இதனை தெரிவித்துள்ளார். அல் ஜசீராவிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் விவகாரம் நெதன்யாகுவின் வாழ்நாள் திட்டம் என்றும், ஆனால் தற்போதைய ஒப்பந்தம் இஸ்ரேலை பேச்சுவார்த்தை செயல்முறையிலிருந்து முற்றிலுமாக விலக்குவதால், இஸ்ரேலுக்கு நாசவேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் இதேபோன்ற ஒரு முயற்சியின் பகுதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்த முழு செயல்முறையிலும் இஸ்ரேல் அரசியல் இழப்புகளைச் சந்தித்துள்ளது என்பது தெளிவாகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையான சோதனை இன்னும் வரவில்லை என்றும், இஸ்ரேலின் முக்கிய இலக்குகளைப் பூர்த்தி செய்யாத எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் நெதன்யாகு முறியடிக்க முயற்சிக்கக்கூடும்.
இதனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் வெற்றி பெறுகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கிடியான் லெவி கூறியுள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தம் இன்னும் மிகவும் நுட்பமான கட்டத்தில் இருப்பதாகவும், லெபனானின் சூழ்நிலையே அதன் வெற்றிக்கான மிகப்பெரிய சோதனையாக அமையும் என்றும் கிடியான் லெவி எச்சரித்தார்.
லெபனானின் நிலைமையை ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்துவதில் ஈரான் வெற்றி கண்டுள்ளது, அதே நேரத்தில் லெபனானில் இஸ்ரேலிய இராணுவத்தின் இருப்பு போர் நிறுத்தத்திற்கு ஒரு பெரிய தடையாக மாறக்கூடும்.
இஸ்ரேலியப் படைகள் லெபனானில் தங்கியிருக்கும் வரையிலும், அங்கிருந்து வெளியேறும் எண்ணம் இல்லாத வரையிலும், முழுமையான போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவது கடினமாகத் தெரிகிறது.
ஏனெனில் இஸ்ரேலியப் படைகளின் இருப்புக்கு எதிரான எதிர்ப்பு தொடர வாய்ப்புள்ளது என்று கிடியான் லெவி மேலும் தெரிவித்துள்ளார்.




