அபுதாபி அமைதி பேச்சு வெற்றியளிக்குமா? அமெரிக்காவின் அடுத்த நகர்வு என்ன?
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, ரஷ்ய மற்றும் உக்ரைன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அபுதாபியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதத்துக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது சமாதானப் பேச்சுவார்த்தை இதுவாகும்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். எனினும், பேச்சுவார்த்தைகளில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அவர் விரிவான தகவல்களை வெளியிடவில்லை.
பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாகவும், முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதுவர்களான ஸ்டீவ் விட்கொஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் ஆகியோரிடமிருந்து கிடைத்துவரும் தகவல்கள் மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார்.
“மாற்றங்களைக் காண்கிறேன். எனக்குக் கிடைக்கும் தகவல்கள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
போர்க் கைதிகளை விடுவிப்பது முன்னுரிமைக்குரிய விடயமாக உள்ளதாகவும், உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களின் உள்ளடக்கம் மற்றும் அவை நீண்டகாலத்துக்கு நடைமுறையில் உறுதிப்படுத்தப்படுவதற்கான அடிப்படைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இரண்டாவது நாள் பேச்சுவார்த்தைகள் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தற்போதைய சந்திப்பின் பெறுபேறுகளை மதிப்பிடுவதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா இரு தரப்பினருடனும் நடத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைப்பாட்டு வேறுபாடுகள் ஓரளவு குறைந்துள்ளதாக ஜாரெட் குஷ்னர் தெரிவித்துள்ளார்.
“இன்றைய ஆக்கபூர்வமான கலந்துரையாடல்கள் எமக்கு நம்பிக்கையளிக்கின்றன” என முதல்நாள் பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின்னர் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இறைமையும் பாதுகாப்பும் கொண்ட, வளமான உக்ரைனை உருவாக்குவதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துவதுடன், ஐரோப்பா முழுவதற்குமான நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்த நிபந்தனைகளில் தொடரும் முரண்பாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமாதான ஒப்பந்தம் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்டு வருகின்ற போதிலும், போரை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒப்பந்த நிபந்தனைகள் தொடர்பில் இன்னமும் பாரிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்து நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், உக்ரைனின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி நிலப்பரப்பு ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
எனினும், பிராந்தியக் கட்டுப்பாடு மட்டுமன்றி எதிர்கால பாதுகாப்பு உத்தரவாதங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய முரண்பாடுகளாக உள்ளன.
உக்ரைன் நடுநிலை நாடாக இருக்க வேண்டும் என்றும், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்றும் ரஷ்யா வலியுறுத்தி வருகின்றது.
இதற்கிடையில், சமாதான ஒப்பந்தமொன்றை எட்டுவதற்கு உக்ரைன் மீது ட்ரம்ப் அழுத்தங்களை அதிகரித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டுவர உக்ரைன் முன்வர வேண்டும்; இல்லையெனில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரமும், உக்ரைன் போர் ஒரு பெரிய மற்றும் சிறப்பான ஒப்பந்தத்தின் மூலம் முடிவுக்கு வருவதற்கு நெருங்கியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எனினும், இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விரைவில் தீர்வு எட்டப்படும் என அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்த போதிலும், அவை நடைமுறையில் வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




