கடல் சீற்றத்தால் தமிழகத்துக்கு இழுத்துச் செல்லப்பட்ட யாழ் மீனவர்கள்
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் கடலில் ஏற்பட்ட பலத்த காற்றின் வேகம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாகத் தங்களது நாட்டுப் படகுடன் இழுபட்டுச் சென்று தமிழகத்தில் கரை ஒதுங்கியுள்ளனர்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த சோன்டின்டன் ஜெனோசன் மற்றும் டிவோசன் ஜூடா ஆகிய இரு மீனவர்களுமே இவ்வாறு தமிழகக் கரையோரத்தில் சுமுகமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று இந்தியக் கடலோரக் காவல் மற்றும் ஊடகத் தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மேற்படி இரண்டு மீனவர்களும் நாட்டுப் படகொன்றில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் குருநகர் கரையோரத்திலிருந்து கடலுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
ஆழ்கடலில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில், திடீரென வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக அவர்களது படகு கட்டுப்பாட்டை இழந்து திசைமாறியுள்ளது.
நெடுநேரம் கடலில் தத்தளித்த இவர்களது படகு, காற்றின் திசையினால் இழுத்துச் செல்லப்பட்டு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணியளவில் தமிழகத்தின் இராமேஸ்வரத்துக்கு அருகிலுள்ள பாம்பன் வடக்குக் கடற்கரை கலங்கரை விளக்கப் பகுதிக்கு அருகே கரை ஒதுங்கியுள்ளது.
இது குறித்து தகவலறிந்த இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினரும் மண்டபம் பொலிஸாரும் விரைந்து சென்று இரு மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
தற்போது இரு இலங்கை மீனவர்களும் மண்டபம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு, எல்லை தாண்டி வந்தமை மற்றும் கடலில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இந்திய அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.




