IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி: தவெக எம்.எல்.ஏ. விவகாரத்தில் தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கடி
இந்தியா, தமிழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை, திருப்பூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) சிருஷ்டி சிங் விசாரிப்பார் என தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த வழக்கு விசாரணையை நிர்வாகப் பிரிவு பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.) காமினி கண்காணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதுடன், அவரது இல்லத்துக்குச் சென்று தகாத முறையில் நடந்துகொண்டதாகவும் தவெக சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்னிலையில், தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, அ.தி.மு.க. வழக்கறிஞர் திரிசூலி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, ஆட்சியரின் முறைப்பாட்டின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் மக்கள் பிரதிநிதி என்பதால், வழக்கு விசாரணையைப் பொலிஸ் மா அதிபர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
இதன்படி, விசாரணை அதிகாரி மற்றும் கண்காணிப்பு அதிகாரி தொடர்பான விவரங்களைத் தெரிவிக்குமாறு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதற்கமைய, விசாரணை அதிகாரியாகத் திருப்பூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்படுவார் என்றும், நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. காமினி விசாரணையைக் கண்காணிப்பார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை நீக்குமாறு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தபோதிலும், அவை இன்னும் நீக்கப்படவில்லை எனக் காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, குறித்த பதிவுகளை உடனடியாக நீக்குமாறு நீதிபதி மீண்டும் உத்தரவிட்டார்.
அரசியல் புயலைக் கிளப்பிய விவகாரம்
இச்சம்பவம் தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்றும், அத்தகைய சம்பவம் நடைபெறவில்லை என்றும் தெரிவித்த தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட தவெக பிரமுகர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆரம்பத்தில் ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை? இந்த விடயத்தில் அழுத்தம் பிரயோகித்தவர்கள் யார்? என்பது தொடர்பிலும் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.




