ஜோர்தானிலுள்ள அமெரிக்க இலக்குமீது ஈரான் தாக்குதல்: ட்ரம்ப் கடும் சீற்றம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இலக்குகள் மீது ஈரான் இரவில் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வாஷிங்டன் ஈரானை “கடுமையாகத் தாக்கி நசுக்கப் போகிறது” என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Fox News அலைவரிசைக்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில், “நாங்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களுக்கு பலத்த அடி காத்திருக்கிறது,” என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய இத்தாக்குதலை ஒரு “திடீர் தாக்குதல்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், உள்ளே வந்த ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு வீரர்களுக்குச் சில நிமிடங்கள் மட்டுமே அவகாசம் இருந்தது என்றும் கூறினார்.
ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைக்குழுக்கள் மீது அமெரிக்கா மற்றும் சவுதி நடத்திய தாக்குதல்கள் குறித்துக் கருத்து தெரிவித்த ட்ரம்ப், அவை ஈராக் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டவை என்றார்.




