மத்திய கிழக்கு போருக்கு மத்தியில் ‘ராஜதந்திர திருப்பம்’
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் கூட்டறிக்கையில் ஈரானும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) சனிக்கிழமை கையெழுத்திட்டுள்ளன.
போரினால் பிரிந்து கிடந்த இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்டுள்ள ராஜதந்திர முன்னேற்றத்தின் அடையாளமாக இது பார்க்கப்படுகிறது.
புதுடெல்லியில் நடைபெறும் உச்சிமாநாட்டின் முதல் நாளுக்கு இடையே, ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian), அபுதாபியின் இளவரசரைச் சந்தித்துப் பேசினார். மோதல் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற மிக உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும்.
இவ்விரு தலைவர்களும் பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள், பதற்றத்தைக் குறைத்தல், ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து விவாதித்ததாக அபுதாபி ஊடக அலுவலகம் எக்ஸ் (X) தளத்தில் தெரிவித்துள்ளது.
எனினும், பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்துக் கூடுதல் விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலக அமைப்பிற்கு சவால் விடுப்பதற்காக 2009இல் தொடங்கப்பட்ட பிரிக்ஸ் அமைப்பின் ராஜதந்திர செல்வாக்கிற்கு இந்த உச்சிமாநாடு ஒரு சோதனையாக அமைந்துள்ளது.
ஆரம்பத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்டிருந்த இவ்வமைப்பு, பின்னர் எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஆறு மாத காலமாக தொடரும் போரில் பரஸ்பரத் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியுள்ள போதிலும், ஈரான்-ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் மாநாட்டு அமைப்பாளர்களும் ராஜதந்திரிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இப்போரின் போது ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் மீது தொடர் தாக்குதல்களை நடத்தியது. அண்மையில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில், அமெரிக்கப் படைகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த அல் மின்ஹாட் (Al Minhad) விமானப் படைத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருந்தது.
“மத்திய கிழக்கு/மேற்கு ஆசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம்… அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறும், நிலைமையை மேலும் மோசமாக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்” என்று பிளக்ஸ் அமைப்பின் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு, நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பு அளித்தல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்திய அந்த அறிக்கை, உலகளாவிய வர்த்தகம், விநியோகச் சங்கிலிகள், எரிசக்தி விநியோகம் மற்றும் கடல்சார் பாதுகாப்பைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அபுதாபி மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மத்திய கிழக்கு நெருக்கடி குறித்த வார்த்தைகளை உருவாக்குவதே அமைப்பிற்கு முன் உள்ள முக்கிய சவாலாக இருக்கும் என்றும், அதுவே கூட்டறிக்கைக்கான வழியைத் திறக்கும் என்றும் வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
இத்தகைய கூட்டறிக்கை தற்போதைய புவிசார் அரசியல் சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், வளர்ந்து வரும் நாடுகளின் கூட்டமைப்பின் ஒற்றுமையை இது வெளிப்படுத்தும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.




