முத்தரப்பு சந்திப்புக்கு முன்பே வெற்றிக் கொண்டாட்டத்தில் ட்ரம்ப்
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான முத்தரப்பு சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னரே, அது ஒரு வெற்றி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய அணுவாயுத சக்திகளைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த முன்னெப்போதும் இல்லாத சந்திப்பில், முக்கிய உடன்பாடுகள் எட்டப்பட வாய்ப்பில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தங்களது நலன்கள் புறக்கணிக்கப்படலாம் என்ற அச்சம் சிறிய நாடுகளிடையே எழுந்துள்ளது.
பொக்ஸ் நியூஸ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில், சீனாவில் தனக்கு வழங்கப்பட்ட பிரம்மாண்ட வரவேற்பை ட்ரம்ப் பெருமையாகக் குறிப்பிட்டார்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், ட்ரம்பை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்றதுடன், இருவரும் கட்டியணைத்துக் கொண்டனர். சீன ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த வரவேற்பு அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், சீனா வழங்கிய மரியாதைக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
ஆசிய – பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அணுவாயுதக் கட்டுப்பாடு முக்கிய பேசுபொருளாக அமைய வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
சீனா அணுவாயுதங்களை வேகமாக அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அணுவாயுதங்களைக் குறைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் சீனாவின் அணுவாயுத இருப்பு குறைவாக இருப்பதால், இத்தகைய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க சீனா தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
உக்ரைன் போர், ஈரான் விவகாரம், வர்த்தகம், அணுவாயுதங்கள் மற்றும் சீனாவின் இராணுவ வளர்ச்சி உள்ளிட்ட பல விடயங்களில் மூன்று நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால், தலைவர்கள் ஒன்றாகச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்வது அவர்களுக்கு அரசியல் ரீதியாக பயனளிக்கலாம் என்றாலும், முக்கிய விடயங்களில் இணக்கப்பாட்டை எட்டுவது கடினம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், ட்ரம்ப் ஷி ஜின்பிங்குடன் தனிப்பட்ட சந்திப்பு மற்றும் வேலைநேர மதிய உணவில் பங்கேற்கவுள்ளதுடன், புட்டினுடனும் தனிப்பட்ட சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், புட்டினுடனான சந்திப்பில் முழுமையான பேச்சுவார்த்தைகள் இடம்பெறாது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக தற்காலிக இணக்கப்பாடு, என்விடியா நிறுவனத்தின் சிப்கள் தென்கிழக்கு ஆசியா ஊடாக சீனாவுக்கு மாற்றப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உள்ளிட்ட விவகாரங்களும் ட்ரம்ப் – ஷி சந்திப்பில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளன.
அமெரிக்காவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகள், சீனாவின் மேம்பட்ட தொழில்நுட்ப அணுகல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகளின் எதிர்காலம் குறித்தும் இந்த சந்திப்பு கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




