நெதன்யாகுவை எவராலும் கைது செய்ய முடியாது: நியூயார்க் மேயரின் கருத்துக்கு ட்ரம்ப் பதிலடி
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வருகை தந்தால், அவரைப் போர்க் குற்றங்களுக்காகக் கைது செய்வேன் என்று நியூயார்க் மேயர் ஜோஹ்ரன் மம்தானி விடுத்த எச்சரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவில் இருக்கும் போது பெஞ்சமின் நெதன்யாகு எந்த வகையிலும், எந்தச் சூழலிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று டிரம்ப் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை தனது சமூக வலைத்தளப் பதிவில் டிரம்ப் இந்த உறுதியை அளித்தார்.
அதில் அவர் மம்தானியின் பெயரைக் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு இஸ்ரேல் உதவி செய்து வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
வரும் செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க நெதன்யாகு நியூயார்க் வந்தால், அவரைக் கைது செய்வதா என்பது குறித்துத் தனது நிர்வாகம் இன்னும் ஆலோசித்து வருவதாக மம்தானி முன்னதாகத் தெரிவித்திருந்தார்.





