விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் திட்டம்
வெளிநாட்டு மாணவர்கள், கலாச்சாரப் பரிமாற்றப் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான விசாக்களின் கால அளவைக் கடுமையாக்க ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய சர்வதேச மாணவர்களுக்கான F விசாக்கள், கலாச்சாரப் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் பார்வையாளர்களை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கும் J விசாக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்களுக்கான I விசாக்கள் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரை காங்கிரஸிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 60 நாட்களில் அமுலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய விதிமுறையின் கீழ், மாணவர் மற்றும் பரிமாற்று விசாக்களின் கால அளவு நான்கு ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்கும்.
தற்போது பல ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய பத்திரிகையாளர்களுக்கான விசா, 240 நாட்கள் வரையிலும், அல்லது சீன நாட்டினராக இருந்தால் 90 நாட்கள் வரையிலும் செயல்பாட்டில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி ட்ர்ம்ப் பதவியேற்றதில் இருந்து குடியேற்ற விதிகளை கடுமையாக்கி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாகவே இந்த புதிய விசா கட்டுப்பாட்டை கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளார்.




