மட்டக்களப்பில் சோகம் – கோவில் திருவிழாவில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு
மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவின்போது, வெடிபொருள் ஒன்று வெடித்ததில் 13 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தான்.
உயிரிழந்தவர் கிரான், குளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் என ‘அடையாளம் காணப்பட்டள்ளார்.
நேற்று (11) இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்ற கொண்டாட்டங்களின்போது, இரவு 11.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.
கொளுத்தப்பட்ட பட்டாசு ஒன்று வெடிக்காததால் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. இருப்பினும், அந்தச் சிறுவன் அதனைப் பார்வையிடுவதற்காக அருகில் சென்றபோது அது திடீரென வெடித்ததாக ‘தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவன் உயிரிழந்தான்.
வாழைச்சேனைப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





