மேற்குலக கட்டுப்பாடுகள் இல்லாத புதிய உலகப் பொருளாதார தளம்: புடின் வலியுறுத்து
மேற்குலக நாடுகளின் கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு புதிய உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கான தளத்தை ‘பிரிக்ஸ்’ (BRICS) அமைப்பு உருவாக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டனர்.
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, மோடியும் புடினும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
உக்ரைன் மற்றும் ஈரான் போர்களால் கடல்சார் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா, வளைகுடா அரபு நாடுகள், ரஷ்யா, ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஒரே நேரத்தில் வலுவான உறவைப் பேண இந்தியா ஒரு இராஜதந்திர சமநிலையைக் கையாண்டு வருகிறது.
பிரிக்ஸ் அமைப்பு, சர்வதேச விதிகள் மற்றும் நிறுவனங்களில் தனது செல்வாக்கை உயர்த்த முயன்று வருகிறது. இருப்பினும், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வளைகுடா மோதலில் வெவ்வேறு துருவங்களில் இயங்கி வருகின்றன.
சீர்திருத்தத்திற்கான கோரிக்கை
பிரிக்ஸ் தொழில்முனைவோர் மன்றக் கூட்டத்தில் உரையாற்றிய புடின், “போட்டி என்பது ஒரு புனிதமான விஷயம், அதைத் தொடக்கூடாது என்று நமக்கு எப்போதும் கற்பிக்கப்பட்டு வந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்று மேற்கத்தியப் போட்டியாளர்கள் தங்களது பழைய ஆதிக்கத்தை மீண்டும் பெற எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கவில்லை” என்று சாடினார்.
பிரதமர் மோடி, ஈரான் ஜனாதிபதி பெசெஷ்கியான் மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிறில் ராமபோசா ஆகியோர் முன்னிலையில் பேசிய ஜனாதிபதி புடின்,
“இந்த போட்டி சில நேரங்களில் மிகவும் கொடூரமான வடிவங்களை எடுக்கிறது. தொழில்துறை மற்றும் தளவாட வசதிகள், குழாய் வழிகள் (pipelines) மீதான நேரடித் தாக்குதல்கள் மற்றும் அழிப்புகளும் இதில் அடங்கும்.
சர்வதேச போக்குவரத்துப் பாதைகளைத் தடுக்கவும், கப்பல்களைக் கைப்பற்றவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று குற்றம்சாட்டினார்.
அதேவேளை, 2024-25 நிதியாண்டில் சுமார் 70 பில்லியன் டாலராக இருக்கும் இருதரப்பு வர்த்தகத்தை, 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா மற்றும் ரஷ்யா இலக்கு நிர்ணயித்துள்ளன.




