விறகு எடுக்கச் சென்ற மூவர் கைது!! காட்டுக்குள் உள் நுழைந்ததாக குற்றச்சாட்டு!!
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மிரிஸ்வெவ காட்டுப் பகுதிக்குள் விறகு எடுப்பதற்காக உள்நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களுடன் இணைந்து விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தின் போது தங்களது மூதாதேயர்கள் செய்து வந்த மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் விவசாய காணியை மீட்டுத் தருமாறு விவசாய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களை செல்ல விடாமல் பயமுறுத்தி தடுத்து வருகின்றனர்.
வருடா வருடம் குறித்த மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் பகுதியில் சேனை பயிர் செய்கையை மேற்கொண்டு வருகின்றனர். இருந்த போதிலும் குறித்த பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அச்சுறுத்துவதுடன், அப்பாவி மக்கள் மீது வழக்குகளை தாக்கல் செய்து அந்த குற்றங்களை ஒப்புக்கொள்ளுமாறும் அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதி விவசாய மக்களுக்கு சொந்தமான பகுதியாகும். கடந்த யுத்தத்திற்கு முன்னர் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். அரசினால் குறித்த மிரிஸ்வெவ மற்றும் புளியங்குளம் விவசாய காணிகள் கெசட் செய்யப்பட்டுள்ளதாக வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் பயமுறுத்தி வருகின்றனர்.
ஆகவே விவசாய மக்களின் நலன் கருதி இந்த அரசாங்கம் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறித்த விவசாய நிலத்தை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இவ்விடயம் தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் ரொஷான் அக்மீமன ஆகியோர் உட்பட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




