AI ஆல் ஆஸ்திரேலியாவில் பறிபோகும் வேலை: இந்தியாவுக்கு வாய்ப்பு
ஆஸ்திரேலியாவின் முன்னணி விமான நிறுவனமான குவாண்டாஸ் (Qantas), தனது உள்நாட்டுக் கூட்டுத்தாபனப் பிரிவுகளில் பணியாற்றும் 850 ஊழியர்களின் வேலைகளை அவுட்சோர்சிங் முறையில் இந்தியாவுக்கு மாற்றத் தீர்மானித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் முதலீடுகளைத் துரிதப்படுத்தும் நோக்கில், ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான அக்சென்ச்சர் (Accenture) நிறுவனத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், குவாண்டாஸ் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி வனேசா ஹட்சன், இந்தத் தீர்மானம் சில ஊழியர்களுக்கு வேதனையையும் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தும் என்பதைத் தாம் உணர்வதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிமாற்ற நடவடிக்கைகள் 2027ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளன. ஆரம்பகட்டமாக நிதி, கொள்வனவு, மனிதவள மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளின் பணிகள் பெரும்பாலும் இந்தியாவுக்கும், ஒரு பகுதி அவுஸ்திரேலியாவிலும் உள்ள குழுக்களுக்கும் மாற்றப்படவுள்ளன.
தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் வேகமும் அளவும் முன்னெப்போதும் இல்லாதவை எனக் குறிப்பிட்ட வனேசா ஹட்சன், இந்தத் திட்டம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்சென்ச்சர் நிறுவனத்துடனான பல ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாக, நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, செயற்பாடுகளை மேலும் திறமையானதாக மாற்றுவதே நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குவாண்டாஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஒரு பில்லியன் ஆஸ்திரேலிய டொலர்களுக்கும் அதிகமான தொகையைத் தொழில்நுட்பத்துக்காகச் செலவிடுகிறது. எனினும், பல தசாப்தங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 1,000 இற்கும் மேற்பட்ட பழைய கணினி மென்பொருள் கட்டமைப்புகள் ஒன்றுடன் ஒன்று முறையாகச் செயல்பட முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நிறுவனத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை மறுசீரமைத்து, ஒரே மாதிரியான பணிகள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவதைத் தவிர்ப்பதன் மூலம் செலவுகளைக் குறைத்து வினைத்திறனை அதிகரிக்க முடியும் என நிறுவனம் எதிர்பார்க்கிறது.
பணிநீக்கத்தால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு, சாத்தியமான இடங்களில் அவுஸ்திரேலியாவிலேயே மாற்றுப் பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், அக்சென்ச்சர் பொறுப்பேற்கும் பணிகள் எதிர்காலத்தில் தானியக்கத் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் மேலும் மாற்றியமைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுமார் 28,000 ஊழியர்களையும், ஏனைய நாடுகளில் 4,000 ஊழியர்களையும் கொண்டுள்ள குவாண்டாஸ் நிறுவனத்தில், ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தமது அன்றாடப் பணிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, அதிகரித்து வரும் எரிபொருள் செலவுகள் காரணமாக விமானக் கட்டணங்களை உயர்த்தவும், சில விமான சேவைகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக குவாண்டாஸ் நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




