இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பதற்றம்: சீனாவின் நகர்வு குறித்து தைவான் கழுகுப்பார்வை
மேற்கு பசிபிக் கடற்பரப்பில், தனது விமானம் தாங்கிக் கப்பலான ‘லியோனிங்’ மற்றும் ஏனைய கடற்படைப் பிரிவுகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டுப் படைகளின் தலையீட்டைத் தடுக்கும் இராணுவப் பயிற்சிகளைச் சீனா முன்னெடுத்து வருவதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ Wellington Koo தெரிவித்துள்ளார்.
தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதியாகக் கருதும் சீனா, அண்மைக்காலமாக தைவானைச் சுற்றியுள்ள வான்பரப்பு மற்றும் கடற்பரப்பில் தனது போர் விமானங்கள், போர்க்கப்பல்களை அதிகளவில் அனுப்பி வருகிறது.
கடந்த வாரம், தைவானைச் சுற்றியுள்ள கடற்பரப்பு, தென்சீனக் கடல் மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் 100 இற்கும் மேற்பட்ட கடற்படை மற்றும் கடலோரக் காவல் படைக் கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தைவானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் நாயகம் ஜோசப் வூ தெரிவித்திருந்தார்.
அத்துடன், தைவானைச் சுற்றியுள்ள பகுதிகளில் சீன விமானப்படையின் போர் விமானங்களின் நடமாட்டமும் பெருமளவில் அதிகரித்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருந்தது. எனினும், இந்த நடவடிக்கைகள் தொடர்பில் சீனா உத்தியோகபூர்வமாக எந்தவொரு இராணுவப் பயிற்சியையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த தைவான் பாதுகாப்பு அமைச்சர் வெலிங்டன் கூ, மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் ‘லியோனிங்’ விமானம் தாங்கிக் கப்பல் அணியையும் ஏனைய கடற்படைப் பிரிவுகளையும் கொண்டு சீனா இத்தகைய இராணுவப் பயிற்சிகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இவ்வாறான பயிற்சிகள், வெளிநாட்டுப் படைகள் மோதலில் தலையிடுவதைத் தடுக்கும் ‘பிரவேசத் தடுப்பு மற்றும் பிராந்தியத் தடுப்பு’ (A2AD) நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக, சீனா தைவான் மீது இராணுவத் தாக்குதலை முன்னெடுத்தால், அமெரிக்கா உள்ளிட்ட அதன் நட்பு நாடுகளின் படைகள் தைவானுக்கு உதவுவதைத் தடுப்பதே இதன் நோக்கமாக இருக்கலாம் எனப் பாதுகாப்பு ஆய்வுகளில் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மாத இறுதியில் தைவானில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்கள் மற்றும் அடுத்த வாரம் ஷென்சென் நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாடு ஆகியவற்றுக்கு முன்னதாகவே சீனாவின் இந்த இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
குறித்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை மீண்டும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பாதிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளதாகத் தைவான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக நட்பு நாடுகளுடன் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதுடன், கண்காணிப்பு மற்றும் உளவுத் திறன்களைப் பயன்படுத்தி உரிய பதிலளிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தைவானைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு இராணுவ பலத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பைச் சீனா ஒருபோதும் கைவிடவில்லை. எனினும், அமைதியான முறையில் மீண்டும் இணைப்பதே விரும்பத்தக்கது என சீனா தெரிவித்து வருகிறது.
ஆனால், தைவானின் இறையாண்மை தொடர்பான சீனாவின் உரிமைக் கோரிக்கையை நிராகரிக்கும் தைவான் அரசாங்கம், தமது எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் உரிமை தைவான் மக்களுக்கே உள்ளது என வலியுறுத்தி வருகிறது.




