அரை நூற்றாண்டு கடந்தும் ஓயாத அவசரநிலை விவாதம்: சோனியா காந்தியின் கருத்தால் மீண்டும் சர்ச்சை
இந்தியாவில் 1975ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரநிலைக் காலத்தில் ஜனநாயக உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், அது அரசியலமைப்புக்கு உட்பட்டே முன்னெடுக்கப்பட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
‘தி இந்து’ நாளிதழுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவசரநிலைக் காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், அக்காலப்பகுதியில் ஜனநாயக உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டதுடன், ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்யும் உரிமையும் இடைநிறுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அந்தக் காலகட்டத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதன் தீவிரத்தை அவசரநிலை முடிவடைந்த பின்னரே தாம் முழுமையாகப் புரிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்போது நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் இடம்பெற்றதாகவும், அரச அலுவலகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும், பரவலான அமைதியின்மை நிலவியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஆயுதப் படையினர் அரச உத்தரவுகளைப் பின்பற்றக்கூடாது எனவும் அழைப்புகள் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதில் இந்திரா காந்தி பெரும் சவால்களை எதிர்கொண்டதாகவும், பின்னர் நிலைமையை உணர்ந்து 1977ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தலை அறிவித்ததாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அவசரநிலைக் காலத்தில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பாக இந்திரா காந்தி பின்னர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததுடன் மன்னிப்பும் கோரியதாக அவர் கூறியுள்ளார்.
பாஜகவின் பதிலடி
இதற்கிடையில், சோனியா காந்தியின் கருத்துகளுக்கு பாஜக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 1975ஆம் ஆண்டு அவசரநிலைக் காலத்தை நினைவுபடுத்தி சோனியா காந்தியின் கருத்துகளுக்கு பதிலளித்துள்ளார்.
அக்காலத்தில் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும், ஊடகவியலாளர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கோரும் விசேட நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர், ஜனநாயக விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தியின் புதிய சுயசரிதை
இதேவேளை, சோனியா காந்தி எழுதியுள்ள Belonging: A Journey of Love என்ற சுயசரிதை நூல் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
இந்த நூலில், இத்தாலியில் தனது குழந்தைப் பருவ வாழ்க்கை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடனான காதல் மற்றும் திருமண வாழ்க்கை, நேரு – காந்தி குடும்பத்துடனான உறவு, இந்திய அரசியலுக்குள் தான் நுழைந்த பின்னணி உள்ளிட்ட தனிப்பட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
நீண்டகாலமாகத் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள விரும்பாதிருந்த போதிலும், தனது வாழ்க்கைப் பயணத்தை மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நூலை எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




