பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு தாய்லாந்து விசா கட்டுப்பாடு
தாய்லாந்து அரசு தனது விசா விதிகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இனி 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மீண்டும் வளர்ச்சியடையச் செய்வதற்காக, 93 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 2024 ஜூலை முதல் 60 நாட்கள் வரை விசா இல்லாமல் தாய்லாந்திற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், இந்த 60 நாள் விசா விலக்கு திட்டத்தை ரத்து செய்ய தாய்லாந்து அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இனி, ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும் தங்கும் காலம் தனித்தனியாக நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பிரச்சினைகள் மற்றும் விசா விதிகளில் ஏற்பட்ட குழப்பமே இந்த மாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது. சமீப காலங்களில் வெளிநாட்டினர்கள் தொடர்பான போதைப்பொருள் மற்றும் பாலியல் கடத்தல் உள்ளிட்ட பல முக்கிய குற்றச்சம்பவங்கள் தாய்லாந்தில் பதிவாகியுள்ளன.
பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதாரத்தையும் தேசிய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு விசா கொள்கையை திருத்துவது அவசியமாகியுள்ளது” என்றார்.
முன்னர் 60 நாள் விசா விலக்கு பெற்ற நாடுகளில் ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இனி 30 நாட்களுக்கு மேல் தங்க விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இருப்பினும், சில நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேறுபட்ட கால வரம்புகள் அமுலில் இருக்கும்.
புதிய விசா முறை தொடர்பான அறிவிப்பு அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




