” மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் NPP அரசே பொறுப்பு கூறவேண்டும்”
“புலிகளை நினைவுருவதற்கு இடமளிப்பதானது பாரதூரமான பிரச்சினையாகும். இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகினால் அதற்குரிய முழு பொறுப்பையும் என்.பி.பி. அரசாங்கம் ஏற்க வேண்டும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP மூத்த உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர Sarath Weerasekara தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு விமல் வீரவன்சவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வெள்ளவத்தையில் பயங்கரவாதிகளை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
இது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட பிரச்சினையாகும். நகைச்சுவையாக கருதி, கடந்துசெல்ல முடியாது.
இவ்வாறு பிரபாகரனையும், புலிகளையும் நினைவுகூருவதற்கு இடமளிப்பதானது, மீண்டுமொரு பிரபாகரன் உருவாவதற்கு வழிவகுக்கக்கூடும்.
அவ்வாறு புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்கினால் அதற்குரிய முழு பொறுப்பையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் அல் கைதா அமைப்பை நினைவுகூருவதற்கு இடமளிக்கப்படமாட்டாது. ஜேர்மனியில் இன்றளவிலும் ஹிட்லரை நினைவுகூருவதற்கு அனுமதி இல்லை.
ஆனால் இங்கே தமிழ் வாக்குகளை குறிவைத்து பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதி வழங்கப்படும் நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ் பிரிவினைவாத புலி டயஸ்போராக்களை திருப்திபடுத்தும் வகையிலேயே செயல்பட்டுவருகின்றது. ” – என்றார்.





