இலங்கையர்களுக்கான சுற்றுலா விசாவை நிறுத்தியது தாய்வான்
இலங்கையை சேர்ந்தவர்களின் சுற்றுலா நுழைவிசைவு விண்ணப்பங்களை தாய்வான் அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக தாய்வான் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாய்வான் அரசாங்கத்தின் அண்மைய நுழைவிசைவு கொள்கையின்படி, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், இலங்கை குடிமக்களிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் அரசாங்க நிறுவனத்தின் அதிகாரபூர்வ அழைப்பின் பேரில் பயணம் மேற்கொள்வது, பரிமாற்ற நடவடிக்கைகள், உறவினர்களை (மூன்றாம் நிலை உறவுமுறைக்குள்) சந்திப்பது, வணிகம், தாய்வானில் ஒரு கப்பலில் இணைவது அல்லது மருத்துவ சிகிச்சை போன்ற காரணங்களுக்காக மட்டும் சிறிலங்கா குடிமக்கள் நுழைவிசைவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வகைகளின் கீழான நுழைவிசைவு விண்ணப்பங்கள் சென்னையில் உள்ள தாய்பே பொருளாதார மற்றும் கலாசார மையம் அல்லது சிங்கப்பூரில் உள்ள தாய்பே பிரதிநிதி அலுவலகத்தால் பரிசீலிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தாய்வானில் உள்ள பிணையாரரிடமிருந்து ஆவணங்கள் (இராஜதந்திரப் பணியகம், உள்நாட்டு கிளை அலுவலகம் அல்லது தாய்வான் வெளிநாட்டுத் தூதரகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டவை), பிணைக் கடிதம், பிணையாளரின் தாய்வான் தேசிய அடையாள அட்டையின் பிரதி ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்டின் சுயவிவரப் பக்கத்தின் நகல், காவல்துறை அனுமதிச் சான்றிதழ், நிதி ஆதாரத்திற்கான சான்று, தாய்வானில் தங்குவதற்கான சான்று மற்றும் திரும்பி வருவதற்கான விமானப் பயணச்சீட்டுஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முன், தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





