சுவிட்சர்லாந்தின் நடுநிலை தன்மைக்கு சவால் – வாக்கெடுப்பு நடத்த முடிவு
போர் மற்றும் ஆயுத விநியோகத்தில் நடுநிலைமை வகிக்கும் சுவிட்சர்லாந்தின் முடிவு தொடர்பில் அடுத்த மாதம் பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்தப்படவுள்ளது.
நெப்போலியன் போர்களின் முடிவில் இருந்து சுவிட்சர்லாந்து நடுநிலைமை கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு பெர்ன் பொருளாதாரத் தடைகளை விதித்ததாலும், பயிற்சி போன்ற துறைகளில் நேட்டோவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தியதாலும் அந்த கொள்கையில் இருந்து சுவிட்சர்லாந்து விளகியுள்ளதாக பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.
தற்போது சுவிஸ் அரசியலமைப்பில் நடுநிலைமைக்கு நிலையான வரையறை எதுவும் இல்லை. அதற்குப் பதிலாக, சுவிஸ் நடுநிலைமை நிரந்தரமானதாகவும் ஆயுதம் ஏந்தியதாகவும் இருக்கும் என்றும், நாடு எந்தவொரு இராணுவக் கூட்டணியிலும் சேராது என்றும் ஒரு உறுதிமொழியை அளிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானிக்கப்பட்டாலன்றி, சுவிட்சர்லாந்து மூன்றாம் நாடுகளுக்கு இடையிலான மோதல்களில் பங்கேற்காது அல்லது போரிடும் நாடுகளுக்கு எதிராகத் தடைகளை விதிக்காது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்த விரும்புகிறார்கள்.
இந்த கூற்றுக்களை வலியுறுத்தியே அடுத்த மாதம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக மரபின் கீழ் நடைபெறும் இந்த வாக்கெடுப்பைத் தொடங்குவதற்காக பிரச்சாரகர்கள் 100,000-க்கும் மேற்பட்ட கையொப்பங்களைச் சேகரித்துள்ளனர். இது அங்கீகரிக்கப்பட்டால், அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும்.
வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சியால் ஆதரிக்கப்படும் இந்த பொது வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 அன்று நடைபெறும்.
இந்நிலையில் சுவிஸ் வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் (Ignazio Cassis), இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில், மிகவும் கட்டுப்பாடான நடுநிலைமைக் கருத்துடன் தற்போதைய அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.
சுவிட்சர்லாந்து நடுநிலைமையாக இருந்து வருகிறது, இருக்கிறது, அது நடுநிலைமையாகவே இருக்கும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் நடுநிலைமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாலும், அந்நாடு எந்தவொரு இராணுவ அல்லது பாதுகாப்பு கூட்டணிகளிலும் உறுப்பினராக இல்லாததாலும், இந்தப் பிரச்சாரத்தால் முன்மொழியப்பட்ட யோசனைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
மாறாக, முன்மொழியப்பட்ட மாற்றங்கள் சுவிட்சர்லாந்தின் செயல்பாட்டுக்கான வாய்ப்பைக் குறைக்கும் என்றும், அந்நாடு தாக்கப்பட்டாலோ அல்லது அத்தகைய தாக்குதலுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாலோ மட்டுமே வெளிநாட்டு சக்திகளுடன் சுவிஸ் ஒத்துழைப்பு அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
“இந்த முன்முயற்சி பாதுகாப்புக் கொள்கை ஒத்துழைப்பைக் கணிசமாகக் கட்டுப்படுத்துகிறது,” என்று கூறிய காசிஸ், அத்தகைய ஒத்துழைப்பு முன்கூட்டியே தயாரிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் கூறினார்.




