ரஷ்ய இராணுவ வீரர்களுக்கு விசா தடை விதிப்பது தொடர்பில் ஆய்வு
ரஷ்ய வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு விசா வழங்குவதைத் தடைசெய்வது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, குறுகிய கால விசாக்களுக்கும், உக்ரைனில் நடந்த சண்டையில் நேரடியாகப் பங்கேற்றவர்களுக்கும் மட்டுமே பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்காக, ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள 21ஆவது பொருளாதாரத் தடைத் தொகுப்பின் ஒரு பகுதியாக இந்தத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் இன்று விவாதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இது பொருளாதாரத் தடைகளின் கீழ் வராமல், விசா கொள்கையின் கீழ் வர வேண்டும் என்றும், அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய விசா விண்ணப்பங்களைக் கையாளும் நாடுகளுக்கு இது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கக்கூடும் என்றும் அந்த நாடுகள் வாதிடுகின்றன.
இந்தக் கவலைகளைக் களைவதற்காக, இந்த கொள்கையை குறுகிய கால விசாக்களுக்கு மட்டும் அமுல்படுத்துமாறு அயர்லாந்து பரிந்துரைத்துள்ளது.




