ஈழத்து மைந்தன் நிஷான் கனகராஜாவிற்கு பிரித்தானியாவின் உயரிய பட்டம் வழங்கி கௌரவிப்பு
இலங்கையில் பிறந்தவரும் பிரித்தானியாவில் குடியுரிமை பெற்றவருமான நிஷான் கனகராஜாவுக்கு பிரித்தானியா மன்னரால் நைட் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
நிஷான் கனகராஜா வின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அங்கு பணியாற்றி வருகிறார்.
வின்ட்சர் மாளிகையில் நேற்று (7) நடைபெற்ற முதலீட்டு விழாவில் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் ‘நைட்’பட்டத்தை வழங்கி கௌரவித்தார்.
உயர் கல்வித் துறைக்கு, குறிப்பாக கல்வியை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக, அவருக்கு இந்த பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது, பாரம்பரிய வழக்கப்படி முழங்காலிட்டிருந்த பேராசிரியர் கனகராஜின் தோள்களில் வாளினால் தொட்டு, பிரித்தானிய மன்னர் சார்ல்ஸ் அவருக்கு உத்தியோகபூர்வமாக இந்த கௌரவத்தை வழங்கினார்.
நிஷான் கனகராஜா 1966 ஆம் ஆண்டு சுண்டிக்குளியில் பிறந்தார். சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான கனகராஜா 1985 ஆம் ஆண்டு கணிதத்துறையில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி நான்கு பாடங்களிலும் அதிவிசேட சித்தி பெற்று கேம்பிறிஜ் பல்கலைக்கழத்திற்குத் தெரிவானார்.
அங்கு 1989 மற்றும் 1993 ஆம் ஆண்டுகள் முறையே இளங்கலை மற்றும் கலாநிதி பட்டங்களை நிறைவு செய்தார்.
2021 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி தொடக்கம் பிரித்தானியாவின் லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




