இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கை ஒருபோதும் செயற்படாது -அனுர உறுதி!
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக இலங்கைப் பிரதேசம் ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், இலங்கை வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடனான சந்திப்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் கவனம் செலுத்திய ஜெய்சங்கர், இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுவதன் மூலம் சமத்துவம், நீதி, மரியாதை மற்றும் அமைதிக்கான தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளுக்கும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தினார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாகவும் வினைத்திறனாகவும் அமுல்படுத்துவதும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதும் இந்த நோக்கங்களை இலகுவாக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.