பிரபல நடிகருக்கு எதிராக குவியும் முறைப்பாடுகள்: விசாரணையை விரப்படுத்தும் பிரித்தானிய பொலிஸார்
பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய நகைச்சுவை நடிகர் ரஸ்ஸல் பிராண்ட் தொடர்பில், புதிதாகக் கிடைத்துள்ள பல முறைப்பாடுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான புதிய தகவல்களைத் துப்பறியும் அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருவதாக பிரித்தானிய பொலிஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் பிரபல தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், ஹொலிவுட் திரைப்பட நடிகராகவும் விளங்கிய ரஸ்ஸல் பிராண்ட், 2004 முதல் 2009 வரையான காலப்பகுதியில் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் மேலும் மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, திங்கட்கிழமை அவருக்கு 10 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அவற்றில் ஒன்று, சம்பவம் இடம்பெற்றபோது 16 வயதுடைய சிறுமி ஒருவரைச் சார்ந்ததாகும்.
மேலும், இந்த வழக்கைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய பல பெண்கள் முன்வந்து முறைப்பாடு செய்யலாம் என லண்டன் பொலிஸ் அதிகாரி ஒருவர் எதிர்பார்ப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது மேலும் பலர் பொலிஸாரைத் தொடர்புகொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில், வழக்கு விசாரணை நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பலர் விசாரணைக் குழுவைத் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கியுள்ளதுடன், சாத்தியமான குற்றச்சாட்டுகள் குறித்தும் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இத்தகவல்களைத் துப்பறியும் அதிகாரிகள் தற்போது மதிப்பீடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஸ்ஸல் பிராண்டின் முன்னாள் காதலியான ஜெமிமா கோல்ட்ஸ்மித், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றைத் தொடர்ந்து அவருக்கு எதிராகப் பொலிஸாரைத் தொடர்புகொண்டதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அப்போது அவர் மீது எந்தவொரு குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்ஸல் பிராண்ட் இறுதியாக நீதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளமை தனக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஸ்ஸல் பிராண்ட், பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பிரதர்’ நிகழ்ச்சியின் துணை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானார்.
2000ஆம் ஆண்டுகளில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தோன்றிய அவர், ‘Get Him to the Greek’ உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
2010ஆம் ஆண்டு பாடகி கேட்டி பெர்ரியைத் திருமணம் செய்துகொண்ட அவர், அந்தத் திருமணத்தின் மூலம் தனக்குப் பெரும் புகழ் கிடைத்ததாக விசாரணையின்போது தெரிவித்திருந்தார். எனினும், 14 மாதங்களிலேயே இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது.




