ஆசிரியத் தம்பதி சடலங்களாக மீட்பு: இந்தியாவை உலுக்கியுள்ள மர்ம மரணம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ஆசிரியத் தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாக்பூரின் பெசா (Besa) பகுதியில் உள்ள ரேவதி நகர் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08) குறித்த தம்பதியினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மனிஷ் பிரலாத் கன்வீர் (38) மற்றும் அவரது மனைவி சோனாலி கன்வீர் (35) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொண்டதுடன், கட்சிரோலி மாவட்டத்தின் சுர்ஜகாட் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக கட்சிரோலியில் இருந்து நாக்பூருக்கு வந்திருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிக்காததால் சந்தேகம்
சம்பவத்துக்கு முந்தைய நாள் மனிஷின் குடும்பத்தினர் பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்ததால், தம்பதியினர் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அவர்களைத் தொலைபேசியில் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும் பதில் கிடைக்காததால், குடும்பத்தினர் உறவினர் ஒருவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
அங்கு சென்ற உறவினர், வீடு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டுள்ளார். இதையடுத்து முதல் மாடிக்குச் சென்று ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, படுக்கையறையில் மின்விசிறியில் தனித்தனியான துணிகளால் தூக்கில் தொங்கிய நிலையில் இருவரையும் கண்டுள்ளார்.
சம்பவத்துக்கு முன்னர் வாக்குவாதம்
கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் 3.30 மணியளவில் தம்பதியினர் இருவரும் வீட்டில் சத்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அயலவர்கள் கேட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்குமே இது இரண்டாவது திருமணமாகும். ஏற்கனவே திருமண வாழ்க்கையில் சிக்கல்களை எதிர்கொண்டிருந்த நிலையில், புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக இருவரும் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்கொலைக் குறிப்பு எதுவும் மீட்கப்படவில்லை
சம்பவ இடத்தில் எந்தவொரு தற்கொலைக் குறிப்பும் மீட்கப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பதியினரின் மரணத்துக்கான சூழ்நிலைகளைக் கண்டறிவதற்காக அவர்களது கையடக்கத் தொலைபேசிகளை ஆய்வு செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், பெல்தரோடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், தம்பதியினரின் மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.




