இம்ரான் கான் விடுதலைக்கான பிரேரணை நிராகரிப்பு: இலங்கை அரசுமீது எதிரணி அதிருப்தி
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்காக முன்வைக்கப்படவிருந்த பிரேரணை நிராகரிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படலாம் என்ற காரணத்தைக் கூறி அரசாங்கம் பிரேரணையை நிராகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணை மனிதாபிமான அடிப்படையில் முன்வைக்கப்பட்டதே தவிர, பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்கள் அல்லது நீதித்துறை நடவடிக்கைகளில் தலையிடும் நோக்கம் கொண்டதல்ல என அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இம்ரான் கானின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துவதே பிரேரணையின் நோக்கம் என்றும், உலக கிரிக்கெட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய சர்வதேச பிரபலமான ஒருவராக அவர் விளங்குவதாகவும் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலிஹ், இந்த விவகாரம் நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் கருத்து வெளியிட்ட வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விடயங்களை விவாதிக்க அரசாங்கம் தயாரில்லை எனத் தெரிவித்தார்.
எனினும், நாடாளுமன்றத்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் இம்ரான் கான் விவகாரம் தொடர்பாக தனது தனிப்பட்ட கருத்துக்களை முன்வைக்க அஜித் பி. பெரேராவுக்கு உரிமை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த அஜித் பி. பெரேரா, கடந்த காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை நாடு மறந்துவிடவில்லை எனத் தெரிவித்தார்.
பாலஸ்தீனம் மற்றும் தென்னாபிரிக்கா தொடர்பான சர்வதேச மனிதாபிமான விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முன்னர் விவாதிக்கப்பட்டுள்ள நிலையில், இம்ரான் கான் தொடர்பான பிரேரணையை ஏன் விவாதிக்க முடியாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.




