செய்தி விளையாட்டு

மலேசியாவை வீழ்த்தியது இலங்கை: யாழ்.இளைஞன் ஆகாஷ் அசத்தல்

ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார பந்துவீச்சு மற்றும் களத்தடுப்புப் பங்களிப்பின் உதவியுடன் இலங்கை இளையோர் அணி மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

ஓமானில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஈழத்தமிழ் வீரரான விக்னேஸ்வரன் ஆகாஷின் அபார பந்துவீச்சு மற்றும் களத்தடுப்புப் பங்களிப்பின் உதவியுடன் இலங்கை இளையோர் அணி மலேசியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமானில் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 15 பேர் கொண்ட இலங்கை இளையோர் அணியில், யாழ்ப்பாணம் – பருத்தித்துறையைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான விக்னேஸ்வரன் ஆகாஷ் (ஹாட்லிக் கல்லூரி மாணவன்) இடம்பெற்றுள்ளார்.

இலங்கை அணி தனது முதலாவது லீக் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மலேசிய அணி, யாழ். வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் மற்றும் கௌசிக குமாரசிங்க ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 28.1 ஓவர்களில் வெறும் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

மலேசிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அஷ்ரப் மிஹைலை 4 ஓட்டங்களுடன் விக்னேஸ்வரன் ஆகாஷ் ‘நிகரடி எறிதல்’ மூலம் ரன் அவுட் செய்தார். அதிகபட்சமாக 51 ஓட்டங்களைப் பெற்ற மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சியாமில் அகிலையும் ஆகாஷ் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார்.

பந்துவீச்சில் கௌசிக குமாரசிங்க 5 விக்கெட்டுகளையும், விக்னேஸ்வரன் ஆகாஷ் 4.1 ஓவர்களில் வெறும் 7 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

89 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 13.5 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 91 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் ரெஹான் பீரிஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களையும், செனுஜ விகானகொட ஆட்டமிழக்காமல் 30 ஓட்டங்களையும் பெற்றனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஆகாஷ் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பின் மூலம் மலேசிய அணியின் நான்கு வீரர்களை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் 2 புள்ளிகளுடன் இலங்கை இளையோர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி