இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் மோடியின் கவனத்துக்கு: இந்திய நிதியமைச்சர் உறுதி
இந்தியப் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்களுக்கு இலங்கைத் தமிழ் மக்கள் மற்றும் சைவ மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
சர்வதேச மாநாட்டில் உரையாற்றுவதற்காகப் புதுடில்லி சென்றிருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோரைச் சந்தித்தபோதே இந்திய நிதியமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
‘இனச் சுத்திகரிப்பின் பின்னணியில் நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள்: காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் இலங்கைத் தமிழ் சமூகத்தின் கதையாடல்கள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய பின்னர், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்திய நிதியமைச்சரைச் சந்தித்து, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண பிராந்திய வல்லரசான இந்தியாவின் தலையீட்டைக் கோரியுள்ளனர்.

தொல்லியல் திணைக்களத்தின் பெயரில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சைவ ஆலயங்களின் செயற்பாடுகளை முடக்கி, பௌத்த விகாரைகள் அமைக்கப்படுவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் இந்திய நிதியமைச்சருக்கு அறிவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“தொல்லியல் திணைக்களத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பல கோவில்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நாம் தெளிவுபடுத்தினோம். குறிப்பாக, திருகோணமலையில் உள்ள சிவன் கோவிலின் அபிவிருத்தி அல்லது புனரமைப்புப் பணிகளுக்கு தொல்லியல் திணைக்களம் எவ்வாறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?
அந்தக் கோவிலைச் சூழவுள்ள பெரும்பான்மைச் சமூகத்தினருக்குச் சொந்தமான கடைகள், கோவிலின் ஆன்மீகத் தன்மைக்கு எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன? இவ்வாறாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கோவில்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு தொல்லியல் திணைக்களத்தின் ஊடாகச் சட்டத்தை நுட்பமாகப் பயன்படுத்தி, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன என்பதை நாம் தெளிவாக எடுத்துரைத்தோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் இந்திய நிதியமைச்சருடனான சந்திப்பில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் எடுத்துரைத்துள்ளனர்.
“அதுமட்டுமன்றி, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்கு எந்தவொரு முயற்சியும் அல்லது முன்னோக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினோம். இந்தியாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அழுத்தத்தின் காரணமாக உருவாக்கப்பட்ட 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் தொடர்புடைய மாகாண சபைத் தேர்தலும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமையையும் தெளிவாக எடுத்துரைத்தோம்.”
தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் முன்வைத்த விடயங்களை மிகவும் கவனமாகச் செவிமடுத்த இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் நிலைமைகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருக்கு எடுத்துரைப்பதாக உறுதியளித்ததாகவும் இளையதம்பி ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
பொறுப்புக்கூறலும் அரசியல் தீர்வும் ‘ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்’ என டில்லி சர்வதேச மாநாட்டில் குறிப்பிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த விடயங்கள் தொடர்பாக ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தின் அதிக கவனத்தைப் பெற்றுக்கொள்வது சவாலானது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
“இது சவாலானதாக இருப்பதற்குக் காரணம், இலங்கையின் மோதல் என்பது அரசை ஆளும் சிங்கள பௌத்தப் பெரும்பான்மைச் சமூகத்திற்கும், பெரும்பான்மையாக சைவர்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கும் இடையிலானதாக இருப்பதுதான்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“எனது நம்பிக்கையின்படி, இந்தியாவில், குறிப்பாக வட இந்தியாவில், இந்த இரு சமூகங்களும் ஒன்றுதான் என்ற எண்ணம் காணப்படுகிறது. இரு சமூகங்களும் கலாசார மற்றும் பாரம்பரிய ரீதியாக ஒரே இனக்குழுமத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுகின்றன. இந்தியக் கண்ணோட்டத்தில் அவ்வாறு தோன்றினாலும், கள யதார்த்தம் வேறுபட்டது. எண்ணிக்கையில் மிகவும் சிறுபான்மையாக உள்ள தமிழ் சைவ மக்களால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் சிங்கள பௌத்தப் பெரும்பான்மைச் சமூகம், தமிழ் மக்களை இலக்குவைத்து அவர்களைத் துரத்திச் செல்வதே கள யதார்த்தமாக உள்ளது.”

சைவம் தமிழ் மக்களின் அடையாளத்துடன் தனித்துவமான தொடர்பைக் கொண்டிருப்பதால், சைவ மத வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும் மாநாட்டில் தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், ‘இந்தியக் கண்ணோட்டத்தில் மாத்திரம் பிரச்சினையை அணுகினால்’ அதன் உண்மையான தன்மையைப் புரிந்துகொள்ளத் தவறி, அதிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
அவுஸ்திரேலிய தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழ்ச் செயற்பாட்டுக் குழு, அகில இந்திய சட்ட ஆசிரியர் பேரவை மற்றும் சர்வதேச சட்டம் தொடர்பான இந்தியச் சங்கம் ஆகியன இணைந்து டில்லி சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.




