காவல் நிலையத்துக்குள் சிவசேனா இளைஞரணித் தலைவர்மீது தாக்குதல்
மகாராஷ்டிர மாநிலம் தானே நகரிலுள்ள கோப்ரி (Kopri) காவல் நிலையத்திற்குள்ளேயே, ஆளுங்கட்சியான சிவசேனாவின் இளைஞரணித் தலைவரான சித்தேஷ் அபங்கே (Siddhesh Abhange) தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணப் பிரச்சினை தொடர்பாக சித்தேஷ் அபங்கேவிற்கும், ஜவுளித் தொழில் செய்து வரும் சில பெண் தொழிலாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண்பதற்காக இரு தரப்பினரும் திங்கள்கிழமை இரவு கோப்ரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கு இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, காவல் நிலையத்திற்குள்ளேயே சித்தேஷ் அபங்கே மீது அப்பெண் தொழிலாளர்களும் அவர்களது சகாக்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி (CCTV) கேமராவிலும் பதிவாகியுள்ளது.
உடனடியாகத் தலையிட்ட காவல்துறையினர் மோதலைத் தடுத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கை முடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பினரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் நிலையத்திற்குள்ளேயே ஆளுங்கட்சித் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் தற்காலிகப் பதற்றத்தை ஏற்படுத்தியது.




