செம்மணி இடைக்கால அறிக்கை நிராகரிப்பு: நீதிகோரி யாழில் போராட்டம்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளின்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்து, யாழ்ப்பாணம் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் சர்வதேச நீதியை வலியுறுத்தி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – அரியாலை தபால்கட்டைச் சந்தியில் முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையுடனும் சுயாதீனமான முறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையான நீதி கிடைப்பதற்குச் சர்வதேச விசாரணைப் பொறிமுறையே அவசியம் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பில் தமது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய போராட்டக்காரர்கள், அதனை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்தமையுடன், செம்மணி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டுப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
சர்வதேச நீதிக்கான கோரிக்கையை முன்வைத்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.




