அரசியல் களத்தில் குதித்தார் முன்னாள் IAS அதிகாரியான திவ்யா மிட்டல்
உத்தரப் பிரதேசப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், தனது நிர்வாகப் பணியில் இருந்து விலகிய சில நாட்களிலேயே அரசியலில் களமிறங்குவதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இருப்பினும், எந்தவொரு அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை என்றும், மக்களுடன் இணைந்து சுயேச்சையான அரசியல் பயணத்தைத் தொடரப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் பேசிய அவர், “சில நாட்களுக்கு முன்பு நான் ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்தேன். ‘அடுத்து என்ன, யாருடன், எங்கிருந்து?’ என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கவே இப்போது வந்துள்ளேன்.
எனது அடுத்தகட்ட நடவடிக்கை – அரசியல். அதிகாரிகளிடம் சென்று சேராத, அல்லது சென்றடைந்தும் கேட்கப்படாத மக்களின் குரலாக நான் மாற விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “இன்றைய அரசியலில் அதிகாரமும் ஆரவாரமும் இருக்கிறது, ஆனால் தொலைநோக்கு சிந்தனை இல்லை. நான் அரசியலில் ஈடுபடுவேன்,
ஆனால் எந்தக் கட்சியுடனும் இணைந்து அல்ல, உங்கள் அனைவருடனும் இணைந்து அதைச் செய்வேன்” என்று கூறியுள்ள அவர், உத்தரப் பிரதேசத்தையே தனது அரசியல் களமாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
2013-ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாரியான திவ்யா மிட்டல், சுமார் 13 ஆண்டுகள் அரசுப் பணியாற்றிய பிறகு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். செப்டம்பர் மாதத்தில் இவரது ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டது.
மக்களுக்கான இந்த புதிய அரசியல் முயற்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள், மருத்துவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் இணையுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.




