“ரஷ்யாவுக்கு சந்தேகம் வேண்டாம் : பிரித்தானியா உக்ரைனுக்கு தோளோடு தோள் நிற்கிறது
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆண்டி பர்னம் இன்றைய தினம் (27.07) உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளார்.
இடைக்கால பிரதமராக பதவியேற்றப்பின் தனது முதல் சர்வதேச விருந்தினராக அவர் ஜெலென்ஸ்கியை வரவேற்கவுள்ளார்.
இது உக்ரைனுக்கான லண்டனின் அசைக்க முடியாத ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரு தலைவர்களும் ஒரு கடற்படைத் தளத்தில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, பிரிட்டன் தலைமையிலான பயிற்சித் திட்டங்கள் உக்ரைனின் ஆயுதப் படைகளை வலுப்படுத்தவும், போர்க்களத்தில் முடிவுகளை வழங்கவும் எவ்வாறு உதவுகின்றன என்பதை விவாதிப்பார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியா உக்ரைனுடன் தோளோடு தோள் நிற்கிறது, எங்கள் ஆதரவு அசைக்க முடியாததாகவே உள்ளது,” என்று பர்னம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் உறுதியைப் பற்றி ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது, உக்ரைனுக்கு நீண்டகால மற்றும் நியாயமான அமைதியை அடையும் வரை நாங்கள் பின்வாங்க மாட்டோம்.” எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இரு நாட்டு தலைவர்களும் ‘சீ ப்ரீஸ்’ பயிற்சியில் பங்கேற்று வரும் 200-க்கும் மேற்பட்ட உக்ரேனிய இராணுவ வீரர்கள் மற்றும் மாலுமிகளைச் சந்திப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சியானது, கருங்கடலில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்குப் பங்கேற்பாளர்களைத் தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்ணிவெடி அகற்றும் பயிற்சியாகும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தில் இருந்து சுமார் 25 பில்லியன் ($33.3 பில்லியன்) மதிப்பிலான உதவியை பிரித்தானியா வழங்கியுள்ளது.
இதில் £16 பில்லியன் இராணுவ உதவியும், £5.6 பில்லியன் இராணுவமல்லாத ஆதரவும் அடங்கும் என்று பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.




