மக்களை சந்திக்க ஒக்டோபர் 24 யாழ். வருகிறார் ஜனாதிபதி அநுர
“தேசிய மக்கள் சக்தியென்பது குடும்ப ஆட்சி கிடையாது, மிகைப்படுத்தப்பட்ட ஊடக பிரச்சாரம் மூலம் உருவாக்கப்பட்ட அரசாங்கமும் கிடையாது. மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்பதால், எங்களை அசைக்க முடியாது.”- என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பவற்றுக்கு நாம் வரையறை விதிக்கமாட்டோம். ஆனால் எல்லைமீறாமல் செயல்படும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது எனவும் அவர் கூறினார்.
எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டம் நடத்தப்படும் என்ற தகவலையும் கம்பஹாவில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரு வருடங்கள் ஆகின்றன. இக்காலப்பகுதியில் எமது அரசாங்கம் எவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது, எந்த திசையில் பயணிக்கின்றது என்பது பற்றி தெளிவுபடுத்தவே மக்களை சந்தித்துவருகின்றோம்.
அரசாங்கத்தின் இருப்பு என்பது மக்களின் கைகளிலேயே உள்ளது. அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி வசம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது. இதற்கு முன்னர் இருந்த ஜனாதிபதிகள் வசமும் இருந்து.
எமக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. இதற்கு முன்னரும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை உருவாக்கிக்கொண்ட அரசாங்கங்கள் இருந்தன.
குறிப்பாக 2019 ஆம் 69 லட்சம் வாக்குகள் கிடைத்தன. நிறைவேற்று அதிகாரம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் என்பன கிடைத்தன. ஆனால் அரசாங்கங்கள் விரட்டப்பட்டன.
எனவே, அதிகாரம் என்பதும் நிறைவேற்று ஜனாதிபதி, நாடாளுமன்றம், பிரதேச சபைகளில் கைகளில் அல்ல, மக்கள் கைகளிலேயே உள்ளது.
இந்த அரசாங்கம் மக்களின் அதிகாரத்தை நம்பும் அரசாங்கமாகும். இந்த அதிகாரம் இருக்கும் வரை அரசாங்கத்தை அசைக்க முடியாது. இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும்.” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.




