சட்டத்தரணிகள் சங்க தலைவருக்கு ‘அரசியல் லஞ்சமா’? – சஜித் மறுப்பு
இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ள அரசாங்கம், தேயிலை, இறப்பர் மற்றும் இரத்தினக்கல் போன்ற நாட்டின் வளங்களை மேம்படுத்த முடியாமல் நாட்டை நாளுக்கு நாள் அதலபாதாளத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட அலுவலகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது சஜித் பிரேமதாச கூறியவை வருமாறு ,
நீதிமன்றங்களின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதற்காகவும், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காகவும் குரல்கொடுத்து வரும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவிற்கு, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் ‘முதலமைச்சர் வேட்பாளர்’ பதவி தருவதாக வாக்குறுதி அளித்ததாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்குப் பின்னால் மறைந்துகொண்டு பொய்களைக் கூறி வருகின்றார்.
மக்கள் விடுதலை முன்னணியினர் (JVP) நீதிமன்ற அதிகாரத்தையும் தமது கட்சித் தலைமையகமான பெலவத்தையிலிருந்தே இயக்க முயற்சிக்கின்றனர். உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க முயல்வதும், நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பாமல் காலந்தாழ்த்துவதும் நீதிமன்றத்தின் சுயாதீனத்திற்கு மரண அடி கொடுக்கும் செயலாகும்.
ஐக்கிய மக்கள் சக்தி யாருக்கும் அரசியல் லஞ்சங்களை வழங்கியதும் இல்லை, வழங்கப்போவதும் இல்லை. 1978-ஆம் ஆண்டுக்குப் பின் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுக்காத, சுதந்திரமான மற்றும் பக்கச்சார்பற்ற நீதிமன்றத்திற்காக முதுகெலும்புடன் குரல்கொடுக்கக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே ஆகும்.” என்றார் சஜித் பிரேமதாச.




