பார்க்கிங் பிரச்சினை கொலையில் முடிந்தது; 16 தடவைகள் துப்பாக்கிச் சூடு – இந்தியாவில் பயங்கரம்
இந்தியாவின் ஹரியானா மாநிலம், பரிதாபாத்தில் வாகன நிறுத்தம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சிங்கப்பூரில் பணியாற்றி வந்த ஒருவர் அயலவரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
பரம்ஜீத் தங்கர் (Paramjeet Dhankar) என அடையாளம் காணப்பட்ட இந்த நபர், தனது மருமகனின் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், தன்தேரஸ் தினத்தன்று இரவு பரிதாபாத்தின் செக்டர் 21C பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வீடு திரும்பிய பரம்ஜீத்துக்கும், அதே கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் வசித்து வந்த அவரது அயலவரான மோகன் என்ற மோனு சர்மாவுக்கும் இடையில் வாகன நிறுத்தம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஆத்திரமடைந்த மோகன், தன்னிடமிருந்த உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியால் பரம்ஜீத் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் 15 முதல் 16 தடவைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் மூன்று அல்லது நான்கு தோட்டாக்கள் பரம்ஜீத்தின் உடலில் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தகராறு வளர்ப்பு நாய் ஒன்றுடன் தொடர்புடையதா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இரு குடும்பங்களுக்கும் இடையில் ஏற்கனவே பலமுறை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சந்தேகநபர், பரம்ஜீத்தின் மகனைத் தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், குற்றப்பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்வதாகவும் சூரஜ்குண்ட் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரஹலாத் குமார் தெரிவித்துள்ளார்.




