இலங்கை செய்தி

இலங்கையில் PAYE வரி வரம்பு அதிகரிப்பு: 2027 பாதீட்டில் புதிய நிவாரணம்

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, சம்பளத்திலிருந்து அறவிடப்படும் PAYE வரிக்கான வருமான வரம்பை மேலும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக, சம்பளத்திலிருந்து அறவிடப்படும் PAYE வரிக்கான வருமான வரம்பை மேலும் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது PAYE வரி அறவிடுவதற்கான வருமான வரம்பு 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

சம்பளத்துடன் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்கும் நோக்கில், இந்த வரம்பை மேலும் அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய பொருளாதாரத்திற்கு தனியார் துறை வழங்கிவரும் கணிசமான பங்களிப்பை அரசாங்கம் அங்கீகரித்துள்ளதாகவும், அத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் பொருளாதார நலனில் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், அடிப்படைச் சம்பள அதிகரிப்பு மாத்திரம் ஊழியர்களுக்கு போதிய பொருளாதார நிவாரணத்தை வழங்காது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேலதிக கொடுப்பனவுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், அதிக சம்பளம் பெறும் ஊழியர்களிடமிருந்து PAYE வரியின் கீழ் அறவிடப்படும் தொகை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் வரி வரம்பை மேலும் திருத்தியமைக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச, அரை அரச, பெருந்தோட்ட மற்றும் தனியார் துறைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்களின் நலன்களையும் பொருளாதாரப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை