அமெரிக்காவின் தடைகளுக்கு மத்தியில் ICCக்கு முன்கூட்டியே நிதி வழங்குகிறது ஜப்பான்
அமெரிக்காவின் தடைகளால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நிதி மற்றும் செயற்பாடுகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவும் நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான தனது முழுமையான நிதிப் பங்களிப்பை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளது.
ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவரான டோமோகோ அகானேவுடனான சந்திப்பின்போது, இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் மிகப்பெரிய நிதிப் பங்களிப்பாளரான ஜப்பான், அதன் மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 15 சதவீதத்தை வழங்குகிறது.
பொதுவாக ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் வழங்கப்படும் இந்த நிதியை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம், அமெரிக்கத் தடைகள் முழுமையாக நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நீதிமன்றத்துக்குத் தேவையான நிதி கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா, தடைகள் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளை முடக்குவதற்கும், அதன் உறுப்பு நாடுகள் சிலவற்றை நீதிமன்றத்திலிருந்து வெளியேற ஊக்குவிப்பதற்கும் முயற்சித்து வருவதாக இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தடைகள் 2027 ஏப்ரல் மாதம் முழுமையாக நடைமுறைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜப்பானின் இந்த நடவடிக்கை ஏனைய முக்கிய நிதிப் பங்களிப்பு நாடுகளையும் முன்கூட்டியே நிதி வழங்கத் தூண்டக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்




