எண்ணெய் டேங்கர் – நிழல் கப்பல்படை வரை : ரஷ்யா மீது புதிய அழுத்தம்
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா மீதான அழுத்தத்தை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
முதலாம் உலகப் போரை விட நீண்ட காலமாக நீடித்து வரும் இந்த மோதலில், போர்க்களத்தில் உக்ரைன் சிறப்பாகச் செயல்பட்டாலும், அதன் நகரங்கள் இன்னும் ரஷ்ய தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றன.
இந்நிலையில் எரிவாயு மற்றும் எண்ணெய் மீதான தடைகள் மூலம் ரஷ்யா மீதான அழுத்ததை அதிகரிக்க G7 நாடுகளின் தலைவர்கள் கூட்டாக ஒப்புக்கொண்டுள்ளனர்.
களத்தில் உக்ரைனுக்குச் சாதகமான ஒரு சூழல் நிலவுகிறது” என்பதையும் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே இந்த மாநாட்டின் போது உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும்” என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய மண்ணில் நடந்த மிக மோசமான போரான இதில், இரு தரப்பிலும் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை அவர் சுட்டிக்காட்டினார்.
“இந்த முழு விஷயமும் அபத்தமானது. எனவே, என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்,” என்றும் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியா முதல் கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
இதற்கமைய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) கொண்டு செல்லும் டேங்கர்கள் உட்பட, ரஷ்யா மீது பல தடைகளை விதித்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் ரஷ்யாவின் புதைபடிவ எரிபொருட்கள் மற்றும் பிற பொருட்கள் மீதான மேற்கத்தியத் தடைகளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ரஷ்யாவின் ‘நிழல் படை’ என்று அழைக்கப்படும் அமைப்புடன் தொடர்புடைய 160 நிறுவனங்களுக்கு எதிராக கனடா புதிய தடைகளை அறிவிப்பதாக கார்னி கூறினார்.




