தனிப்பட்ட உறவால் வெடித்த சர்ச்சை; என்விடியாவுக்கு நெருக்கடி- மேலும் பல தகவல்கள் அம்பலம்
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான என்விடியாவின் (Nvidia) தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங்கின் தனிப்பட்ட உறவு, சீனாவுக்கு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட சுமார் 7.5 பில்லியன் டொலர் பெறுமதியான கணினிச் சில்லுகளை computer chip அனுப்புவதற்கு உதவியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சீனாவைச் சேர்ந்த தொழிலதிபரும், பெய்ஜிங்கின் உளவாளியாகச் செயற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் அலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடனான ஜென்சன் ஹுவாங்கின் தொடர்பு குறித்தே இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.
அமெரிக்காவின் ‘தி இன்பர்மேஷன்’ ஊடகம் வெளியிட்ட தகவல்களின்படி, குறித்த பெண்ணுடன் தொடர்புடைய வலையமைப்பின் ஊடாக என்விடியாவின் H100, H200 மற்றும் A100 ரகத்தைச் சேர்ந்த சுமார் 2 இலட்சத்து 40 ஆயிரம் கணினிச் சில்லுகள் சீனாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றில் சில சில்லுகள் அலிபாபா, டென்சென்ட் உள்ளிட்ட சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களையும், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிலையங்களையும் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ (FBI) விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், ஜென்சன் ஹுவாங் வெளிநாட்டு உளவுத்துறை நடவடிக்கையொன்றின் இலக்காக மாற்றப்பட்டாரா என்பது குறித்து ஆராயப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஜென்சன் ஹுவாங் தனது தனிப்பட்ட உறவில் ஏற்பட்ட தவறை ஒப்புக்கொண்டுள்ளதாகவும், எனினும் அது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், என்விடியா நிறுவனத்தின் சுயாதீன இயக்குநர்கள் குழு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக வெளிப்புற சட்ட ஆலோசகர்களை நியமித்துள்ளது.
எனினும், நிறுவனத்தின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களோ அல்லது வர்த்தக இரகசியங்களோ பாதிக்கப்பட்டுள்ளதாக நம்புவதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என நிறுவனத்தின் இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சீனாவும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. சீனாவை உளவு நடவடிக்கைகளுடன் தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சீனா குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்தச் சர்ச்சை காரணமாக என்விடியா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரண்டு வர்த்தக அமர்வுகளில் சுமார் 430 பில்லியன் டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளதுடன், அமெரிக்காவில் கணினிச் சில்லுகளின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்குவது குறித்தும் விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எத்தகைய தகவல்களை அறிந்திருந்தார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
சீனாவுடன் தொடர்புடைய நிறுவனமொன்றைத் தடைப்பட்டியலில் சேர்ப்பது தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், வர்த்தகத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சர்ச்சை என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத் துறையில் அதன் எதிர்கால வர்த்தக நிலைமை தொடர்பிலும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.




