ஜேர்மனியில் மருத்துவ விடுப்பு எடுக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – விதிகளை கட்டாயமாக்க பரிசீலனை
மருத்துவ விடுப்புச் சான்றிதழ் (sick leave) விதிகளைக் கடுமையாக்கும் திட்டங்களை ஜேர்மனி அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள தொழிலாளர்கள் 2024-ஆம் ஆண்டில் சராசரியாக சுமார் 22 நாட்கள் மருத்துவ விடுப்பாக எடுத்துள்ளனர். இது சர்வதேச அளவில் மிக உயர்ந்த அளவுகளில் ஒன்றாகும்.
மின்னணு மருத்துவ விடுப்புச் சான்றிதழ் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, 2022-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக சுகாதாரம், கல்வி போன்ற துறைகளில் இந்நிலை கவலைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது. இதன்காரணமாக நோய் விடுப்பு விதிகளை கடுமையாக்க அந்நாட்டு அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
சுகாதாரம் மற்றும் சமூகப் பணியில் உள்ள பெண்கள் சராசரியாக 27 நோய் விடுப்பு நாட்களையும், ஆசிரியர்கள் 24 விடுப்பு நாட்களையும் எடுத்துள்ளதாக சுகாதாரக் காப்பீட்டாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அந்தத் தொழில்களில் நிலவும் நாள்பட்ட பணியாளர் பற்றாக்குறை, குறைந்த ஊதியம், பலவீனமான தொழில் வாய்ப்புகள் மற்றும் அதிக உணர்ச்சி அழுத்தங்கள் ஆகியவற்றை மோசமான மனநலத்திற்கான ஆபத்துக் காரணிகளாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.




