கிழக்கு கடலில் வடகொரியா ஏவுகணை சோதனை – உன்னிப்பாக கவனிக்கும் ஆசிய நாடுகள்
வடகொரியா இன்று கிழக்கு கடலுக்கு அப்பால் குறுகிய தூரம் பாயும் பல ஏவுகணைகளைச் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.
வொன்சான் (Wonsan) பகுதியிலிருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள் சுமார் 250 கி.மீ (155 மைல்) தூரம் பயணித்ததாக தென் கொரியாவின் கூட்டுத் தலைமைப் படைப்பிரிவு (JCS) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏவுகணைகளின் தொழில்நுட்ப விவரங்கள் குறித்து தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் விரிவான பகுப்பாய்வை மேற்கொண்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறை அதிகாரிகள் ஏவுகணை ஏவுதல்கள் குறித்த தகவல்களைத் தொடக்கத்திலிருந்தே கண்காணித்து பகிர்ந்துகொண்டதாகவும், அதேவேளையில் ஏவுகணைகள் குறித்த தகவல்கள் ஜப்பானுடனும் பகிர்ந்துகொள்ளப்பட்டதாகவும் கூட்டுப் படைத் தலைமை (JCS) மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஏவுகணை ஏவப்பட்டதைத் தொடர்ந்து, தென் கொரிய அதிபரின் தேசிய பாதுகாப்பு அலுவலகம், பாதுகாப்பு அமைச்சகம், கூட்டுப் படைத் தலைமை மற்றும் பிற தொடர்புடைய அமைப்புகளை உள்ளடக்கிய அவசரப் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியதாக அதிபர் அலுவலகம் தெரிவித்தது.




