நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு – 02ஆவது சந்தேகநபர் கைது
நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர் குரோஷியாவில் கைது செய்யப்பட்டு ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டின் வழக்குறைஞர்கள் இன்று அறிவித்தனர்.
இது தொடர்பில் ஜெர்மனியின் கூட்டாட்சி வழக்குறைஞர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டாவது சந்தேகநபரை விளாடிமிர் இசட். என்று மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய பிடியாணை உத்தரவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து வெடிபொருட்களைப் பொருத்திய, செர்ஹி கே. தலைமையிலான குழுவில் விளாடிமிர் இசட், பயிற்சி பெற்ற ஸ்கூபா மூழ்காளராக செயற்பட்டுள்ளதாகவும், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் முதல் சந்தேக நபரான, முன்னாள் உக்ரேனிய இராணுவ அதிகாரி செர்ஹி கே Serhii K மீது உக்ரேனிய அரசு நிறுவனங்களின் சார்பாகச் செயல்பட்டு வெடிப்புகளைத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் கடந்த 2025 ஆம் ஆண்டு இத்தாலியில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜெர்மனிக்கு நாடுகடத்தப்பட்டார்.
இருப்பினும் அவர் தனக்கும் அந்த வெடிப்பு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




