அணுசக்தி கண்காணிப்புக்கு அனுமதியில்லை – ஈரான் அதிரடி
அமெரிக்காவின் இராணுவத் தாக்குதல் அச்சுறுத்தல்கள் நீடிக்கும் நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது.
சர்வதேச அணுசக்தி முகவரகத்துக்கு (IAEA) இம்மாதம் அனுப்பிய கடிதத்தில் ஈரான் இந்த நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளதாக, அந்த அமைப்பின் இரகசிய அறிக்கையை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஈரானுக்கு எதிராக மேலும் இராணுவத் தாக்குதல்களை நடத்துவதாகத் தொடர்ச்சியாகவும் வெளிப்படையாகவும் அச்சுறுத்தி வருவதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
குறிப்பாக, ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே கண்காணிப்புப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்கள் தீர்க்கப்பட்டு, வழக்கமான அணுசக்திக் கண்காணிப்பை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அத்தியாவசிய நிலைமைகள் உருவாக்கப்படும் வரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனவும் ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களில் சேதமடைந்த அணுசக்தி நிலையங்களைப் பார்வையிட சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு இதுவரை ஈரான் அனுமதி வழங்கவில்லை.
இதனால், தாக்குதல்களுக்கு உள்ளான அணுசக்தி நிலையங்களின் தற்போதைய நிலைமை மற்றும் ஆயுதத் தயாரிப்புக்கு நெருக்கமான செறிவூட்டல் அளவைக் கொண்ட யுரேனியக் கையிருப்பு தொடர்பான விபரங்களை அந்த அமைப்பினால் உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், உரிய சட்ட மற்றும் நடைமுறைச் சூழ்நிலைகள் அனுமதிக்கும் பட்சத்தில், அணுசக்தி பாதுகாப்புக் கடப்பாடுகளை முழுமையாக மீண்டும் நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணுப்பொருட்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்காமை அணு ஆயுதப் பரவல் தொடர்பான கவலையை ஏற்படுத்துவதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் தெரிவித்துள்ளது.




