பெண் அடிமை வியாபாரம் , IS ஆதரவு: தாயகம் திரும்பிய ஆஸ்திரேலியப் பெண்கள் மீது வழக்கு!
சிரியா அகதி முகாமில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய மூன்று பெண்கள் மீது தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இதில் ஒருவர் சிரியாவில் இருந்தபோது பெண்ணொருவரை அடிமை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை மாலை ஆஸ்திரேலியா வந்தடைந்த குழுவில் குறித்த பெண்களும் அவர்களது குழந்தைகளும் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் டமாஸ்கஸிலிருந்து விமானம் மூலம் மெல்போர்ன் மற்றும் சிட்னிக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஐ.எஸ். ஆமைப்புடன் தொடர்புடைய குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டனர். இன்று வெள்ளிக்கிழமை அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஐ.எஸ். அமைப்புக்காக போரிடச் சென்ற தங்களது கணவர்களுடன், இந்தப் பெண்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றனர். இது தொடர்பான நீண்டகால விசாரணைக்குப் பிறகே தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
31 மற்றும் 53 வயதுடைய இரண்டு பெண்கள் மீது, சிரியாவில் மனிதநேயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
53 வயதான பெண் 2014-இல் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சிரியா சென்றதாகவும், அங்கு 10,000 அமெரிக்க டாலர் (சுமார் 13,900 ஆஸ்திரேலிய டாலர்) கொடுத்து ஒரு பெண்ணை அடிமையாக வாங்குவதற்குத் துணையாக இருந்ததாகவும், அந்தப் பெண்ணைத் தனது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாகவும் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மெல்போர்ன் விமான நிலையத்திற்கு இவர்கள் வந்திறங்கியபோது பெரும் பரபரப்பு நிலவியது.
அங்கிருந்த ஊடகவியலாளர்களுக்கும், முகமூடி அணிந்து வந்த ஒரு கும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பலத்த ஆயுதம் ஏந்திய காவல்துறை தலையிட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்தியது.
32 வயதுடைய ஒரு பெண் மீது தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்ததற்கும், ஐஎஸ் அமைப்பில் இணைந்ததற்கும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களுடன் வந்த குழந்தைகள் புனர்வாழ்வுக்குட்படுத்தப்படவுள்ளன.





