இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு: இலங்கை தமிழ் பேசும் கட்சிகளுக்கு இந்தியா வழங்கிய ஆலோசனை என்ன?

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, ஆறு தமிழ்ப்பேசும் 6 கட்சிகளின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய 6 தமிழ்ப்பேசும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று மாலை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.

திங்கட்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்கள் மற்றும் அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக, அவர்கள் இந்தியத் தூதுவரிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்ட, புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பித்தல், மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், மலையக மக்களுக்கான காணிப்பகிர்வு மற்றும் வீடமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பற்றியும், அவற்றுக்கு சிறிலங்கா அதிபர் அளித்த பதில்கள் குறித்தும் தமிழ்ப் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட இந்தியத் தூதுவர், மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக இந்தியா ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு அழுத்தம் வழங்கியிருப்பதாகவும், இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி அரசாங்க உயர்மட்டப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது அதனை மீண்டும் வலியுறுத்துவார் எனவும் உறுதியளித்தார்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில், ‘தற்போது நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை கைவிட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து முழுமையாக ஆரம்பிக்கப் போகிறீர்களா?’ என தமிழ்ப்பேசும் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் இந்தியத் தூதுவர் வினவியுள்ளார்.

தற்போது மாகாணசபைகள் முறைமை உள்ளிட்ட சில கூறுகள் மூலம் அதிகாரப்பகிர்வுக்கான கட்டமைப்பொன்று அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை முற்றாக அழித்து விட்டு, மீண்டும் பூச்சியத்திலிருந்து ஆரம்பிப்பது ஆபத்தான விடயம் எனவும், புதிய அரசியலமைப்பு எனும்போது தற்போது இருப்பதை விடவும் கூடுதலான அதிகாரப்பகிர்வு பற்றியே தாம் பேசுவதாகவும் தமிழ்ப் பேசும் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

அதற்குப் பதிலளித்த இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்த விடயத்தில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும், ஒரு இலக்கை அடைவதற்கான பாதையில் அரைவாசி தூரத்தைக் கடந்ததன் பின்னர், அதனைப் புறந்தள்ளிவிட்டு, மீண்டும் தொடக்கப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது புத்திசாலித்தனமான நகர்வு அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை